சாதனையிலும் வேதனை; இந்திய அணியின் 92 ஆண்டு வரலாற்று வெற்றியில் இப்படியொரு சோக பின்னணியா?
சென்னையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது 92 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக டெஸ்டில் தோல்விகளின் எண்ணிக்கையை விட அணி வெற்றிகளின் எண்ணிக்கையைப் பெற்றது. 1932ஆம் ஆண்டு சிகே நாயுடு தலைமையில் இந்தியா தனது முதல் டெஸ்டில் விளையாடியது. ஆனால் 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டிக்குப் பிறகு, தோல்விகளின் எண்ணிக்கையை விட இந்தியா தனது வெற்றிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் அதிகரிக்க பெற முடியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 179வது வெற்றி
தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் இந்தியாவின் 179வது வெற்றியாகும். மொத்தம் 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 178 தோல்விகளைப் பெற்றுள்ளதோடு, 222 போட்டிகளை டிரா செய்துள்ளது. தோல்விகளின் எண்ணிக்கையை விட டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளின் எண்ணிக்கையை பெற்ற ஒரே அணி இந்தியா மட்டும் அல்ல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நேர்மறையான வெற்றி-தோல்வி விகிதத்தைக் கொண்ட மற்ற அணிகள் ஆகும். இவற்றில் ஆஸ்திரேலியா 414 வெற்றி மற்றும் 232 தோல்விகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்து கடைசி இடத்தில் உள்ளது.
தோல்வியை விட அதிக வெற்றிக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட இந்தியா
இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் முதல்முறையாக தோல்வியை விட அதிக வெற்றியை பெற்று சாதனை படைத்தாலும், இதிலும் ஒரு சோகம் ஒளிந்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக தோல்வியை விட அதிக வெற்றிக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட அணியாக இந்தியா மாறியுள்ளது. இந்த பட்டியலில், ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மூன்றாவது போட்டியிலும், பாகிஸ்தான் 16வது போட்டியிலும் இந்த சாதனையை முதல்முறையாக படைத்தது. இங்கிலாந்து 23வது போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் 99வது போட்டியிலும், தென்னாப்பிரிக்கா 340வது போட்டியிலும் இந்த சாதனையை செய்தன. இந்தியா மிக மோசமாக 580வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளது.