"கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?
அட்யா பட்யா என்பது தலா ஒன்பது வீரர்களை கொண்ட இரு அணிகளாக விளையாடப்படும் இந்தியாவின் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு பார்ப்பதற்கு கபடி போட்டி மற்றும் கோ-கோ போட்டிகளின் கலவையாக உள்ளது. தலா 7 நிமிடங்கள் கொண்ட நான்கு செட்களாக நடத்தப்படும் இந்த போட்டியில், அதிக செட்களை வெல்லும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உள்ளூர் அளவில் விளையாடப்பட்டு வந்த இந்த போட்டிக்காக 1982இல் இந்திய அட்யா பட்யா கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. மேலும் 2013இல் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த கூட்டமைப்பு சார்பாக இந்திய வீரர்கள் தெற்காசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
அட்யா பட்யா போட்டியில் சர்வதேச அளவில் இந்தியாவின் ஆதிக்கம்
ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் தெற்காசிய அளவில் இதுவரை நடந்த 7 போட்டிகளிலும் இந்தியாவே சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கிளித்தட்டு என்ற பெயரில், இந்த போட்டி அதிக அளவில் விளையாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழகத்தை பொறுத்தவரை, 4,000 முதல் 5,000 பேர் இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய அட்யா பட்யாவின் 36வது சீசனை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமிழகம், அடுத்த மூன்று மாதங்களில் போட்டியை நடத்த தயாராகி வருகிறது.