ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹாங்சோவுக்குச் செல்ல அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 உஷூ வீரர்கள் அனுமதிக்கப்படாததற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அருணாச்சலைச் சேர்ந்த மூன்று வுஷூ வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோருக்கு ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து அங்கீகார அட்டை வழங்கப்பட்டிருந்தது. இது சீனாவுக்கான நுழைவு விசாவாகவும் செயல்படுகிறது. எனினும், புதன்கிழமை (செப்டம்பர் 20) ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தபோது அவர்களது பயண ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. பின்னரே விஷயம் தெரியவந்த நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சீனாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து, தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.
அனுமதி மறுப்பை நிராகரித்துள்ள சீனா
சீனாவின் நடவடிக்கை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நெறிமுறைக் குழு தலைவர் வெய் ஜிஜோங், சீனா வீரர்களுக்கு விசா வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார். மாறாக இந்த விளையாட்டு வீரர்கள் விசாவை ஏற்கவில்லை என்றார். தகுதிச் சான்றிதழ் பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களையும் சீனாவில் போட்டியிட அனுமதிக்கும் ஒப்பந்தம் தெளிவாக உள்ளதால் ஏற்கனவே அனைவருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது என்று வெய் ஜிஜோங் மேலும் கூறினார். இதற்கிடையே, இதர 10 வுஷூ வீரர்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.