ஒரு மாத காலத்தில் 4 விளையாட்டுகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்திய இந்தியா
சனிக்கிழமை (அக்டோபர் 14)நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. விளையாட்டு உலகில் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால் அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், கடந்த ஒருமாத காலத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது பல விளையாட்டுகளிலும் இந்தியா பாகிஸ்தான் மீது தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டி சாதனை படைத்துள்ளது. அந்த வகையில், ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டி தவிர, எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கங்களை வென்றுள்ளது. பல்வேறு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பெற்ற வெற்றிகள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
ஒருநாள் உலகக்கோப்பையில் தொடரும் தோல்வியே கண்டிராத வரலாறு
ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதற்கு முன்பு 7 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருட்டியது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 86 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் எடுத்து வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம், 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி எதிராணியால் வீழ்த்தப்படாமல் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது. முன்னதாக, பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் 8-0 என வெற்றி தோல்வியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்குவாஷ் போட்டியில் வரலாறு காணாத வெற்றி
சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 ஆடவர் குழு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது. மகேஷ் மங்கோன்கர் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது ஆரம்பத்தில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும், சௌரவ் கோசல் வலுவான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்று ஸ்கோரை சமன் செய்தார். இதையடுத்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டியில் அபய் சிங் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். மேலும், இந்த தங்கம் மூலம் ஸ்குவாஷ் அணி பிரிவில் இந்தியா தனது முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்தது.
ஹாக்கியில் கோல் மழை பொழிந்த இந்தியா
ஹங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் இந்திய ஹாக்கி அணி, செப்டம்பர் 30 அன்று நடந்த குழு போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, பாகிஸ்தானுக்கு எதிராக எதிராக இந்தியாவின் சிறந்த செயல்திறனைக் குறித்தது மற்றும் போட்டியில் அவர்களின் நிலையை கணிசமாக உயர்த்தியது. 8வது நிமிடத்தில் அபிஷேக்கின் டைவிங் உதவி மூலம் மந்தீப் சிங் கோல் அடிக்க, தனது கோல் வேட்டையைத் தொடங்கிய இந்தியா, அதன் பிறகு போட்டி முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி 10-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கால்பந்தில் இந்திய இளையோர் அணி அசத்தல் வெற்றி
தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது. நேபாளம் இந்த ஆண்டு முதல் முறையாக எஸ்ஏஎப்எப் யு19 கால்பந்து சாம்பியன்ஷிப்பை நடத்தியது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, செப்டம்பர் 30 அன்று நடந்த இறுதிப்போட்டியில் காத்மாண்டுவில் உள்ள தஷ்ரத் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டியில் வென்று ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பை வென்றது. இது இந்தியா பெறும் எட்டாவது யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் பட்டமாகும்.