அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவாரி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போதிலும், இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெற முடியாத துரதிர்ஷ்ட நிலையையே மனோஜ் திவாரி கொண்டிருந்தார். மொத்தம் 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள மனோஜ் திவாரி, கடைசியாக ஜூலை 2015இல் ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்நிலையில், தற்போது ஓய்வை அறிவித்த மனோஜ் திவாரி, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மனோஜ் திவாரியின் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
இந்திய அணிக்காக 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 26.09 சராசரியில் தலா ஒரு சதம் மற்றும் அரைசதத்துடன் 287 ரன்கள் எடுத்தார். 3 டி20 போட்டிகளில், ஒரே ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த மனோஜ் திவாரியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வழக்கமான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்த அவர், 2012ஆம் ஆண்டு கவுதம் காம்பிர் தலைமையில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒருவராக இருந்தார். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.