எமெர்ஜிங் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் யு-23 அணி
ஹாங்காங்கில் நடந்த மகளிர் எமெர்ஜிங் கிரிக்கெட் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூன் 21) வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், யு-23 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளையும், மன்னத் காஷ்யப் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த தொடரில் மொத்தமுள்ள 17 போட்டிகளில் 9 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.