
INDvsIRE 2வது டி20 : கெய்க்வாட் அரைசதத்தால் இந்தியாவுக்கு வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் இந்திய கிரிக்கெட் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து 58 ரன்கள் குவித்தார்.
இது கெய்க்வாட்டிற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அரைசதமாகும் மற்றும் வெளிநாட்டில் அவர் எடுத்த முதல் அரைசதமும்கூட.
இதற்கிடையே சஞ்சு சாம்சனும் தன் பங்கிற்கு 40 ரன்கள் மற்றும் ரின்கு சிங் 38 ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது.
ireland lost by 33 runs
அயர்லாந்துக்கு கைகொடுக்காத ஆண்ட்ரூ பால்பிர்னியின் அரைசதம்
அயர்லாந்து கிரிக்கெட் அணி கடினமான இலக்குடன் களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னி அதிரடியாக விளையாடி 72 ரன்கள் குவித்தார்.
இது அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 10வது அரைசதமாகும் மற்றும், இந்த போட்டியில் 31வது ரன்னை எடுத்தபோது, சர்வதேச டி20யில் 2,000 ரன்களை கடந்த இரண்டாவது அயர்லாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கிடையே, ஆண்ட்ரூ பால்பிர்னியின் ஆட்டத்திற்கு துணையாக மற்ற வீரர்கள் யாரும் களத்தில் நிற்காத நிலையில், அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.