INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி!
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வந்தன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி விளையாடி வந்தனர்.
மழையின் காரணமாக தடைப்பட்ட போட்டி:
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் மழை தொடர்ந்து போட்டிகளில் இடையூறு செய்து வருவதால், இன்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு செப்டம்பர் 11ம் தேதியை (நாளை) ரிசர்வ் தேதியாக ஒதுக்கி வைத்தனர். குழு சுற்றிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்றும் கொழும்புவில் தொடர் மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 147 ரன்களைக் குவித்திருந்த போது போட்டி தடைப்பட்டது. இடையே சில மணி நேரம் மழை நின்ற போதிலும், விளையாடுவதற்கு ஏற்ப மைதானத்தை தயார் செய்வதில் சிக்கல் எழுந்து போட்டி நடைபெறுவது தாமதமாகி வந்தது.
ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட போட்டி:
சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக, இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், போட்டி தடைபட்ட இடத்திலிருந்தே ரிசர்வ் நாளான நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை 24.1 ஓவர்களில் இருந்து இந்தியா மீண்டும் பேட்டிங்கைத் தொடங்கி, முழுமையான 50 ஓவர் போட்டியாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்திய அணியின் பேட்டர்கள் நல்ல ரன்ரேட்டுடன் ரன்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு இன்று இந்திய பேட்டர்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் மட்டும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருக்கின்றனர்.