IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்?
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ரிசர்வ் நாளான இன்று போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, நேற்று ஆட்டத்தின் இறுதியில், 24.1 ஓவர்கள் மட்டுமே வீசியதால், இந்தியா 147/2 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து இன்று ஆட்டம் நடைபெற்றால், இந்தியா மீதமுள்ள பந்துகளை எதிர்கொள்ளும். எனினும், வானிலை அறிக்கைகள் படி இன்றும் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், போட்டியின் நிலை என்ன என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
மழை பொழிந்தால், மீண்டும் போட்டி ரத்தாகுமா?
மழை காரணமாக இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யவில்லை என்றால், பாகிஸ்தான் 24 ஓவர்களில் திருத்தப்பட்ட இலக்கை துரத்த வேண்டும். ஒரு வேளை, ஆட்டத்தை இன்னும் குறைக்க வேண்டும் என்றால், பாகிஸ்தான் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்தியா அணி, ஏழு முறை வெற்றியடைந்த நிலையில், பாகிஸ்தான் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது.(NR:2). 2010-ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆறு ODI போட்டிகளில், நான்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.