உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. மேலும் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்வதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடவுள்ளன. இது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் போட்டி என்பதால், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதும் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியை நடத்த 10க்கும் மேற்பட்ட நகரங்களை பிசிசிஐ ஆலோசித்து வந்தாலும், 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானம்தான் அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதல்கள்
இரு நாடுகளிடையே நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஐசிசி கோப்பைகள், ஆசிய கோப்பை போன்ற பன்னாட்டு நிகழ்வுகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பையில்தான் இந்தியாவில் விளையாடின. அந்த போட்டியில் இந்தியா எம்எஸ் தோனியின் தலைமையில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பிறகு வெளிநாட்டு மைதானங்களில் மட்டுமே இரு அணிகளும் பன்னாட்டு நிகழ்வுகளில் விளையாடியுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசிய கோப்பையில் விளையாட அந்நாட்டிற்கு செல்ல இந்திய அணி மறுத்துவிட்ட நிலையில், இந்தியா தங்கள் நாட்டுக்கு வராவிட்டால் தாங்களும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வரமாட்டோம் என கூறி வருகிறது.