ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்த ரோஹித் ஷர்மா; யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலியும் முன்னேற்றம்
மார்ச் 2024இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. அதன் பிறகு வரும் செப்டம்பர் 19 முதல் பங்காளதேஷிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், நீண்ட காலமாக டெஸ்டில் விளையாடாத நிலையில், சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி முதல் 10 பேட்டர்களில் தங்கள் நிலையை வலுப்படுத்தியுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 751 ரேட்டிங் புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை
ரோஹித் ஷர்மாவைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் 740 மற்றும் 737 ரேட்டிங் புள்ளிகளுடன் முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் இரண்டு இன்னிங்ஸிலும் 19 மற்றும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த ஹாரி புரூக் ஏழு இடங்கள் சரிந்து 709 ரேட்டிங் புள்ளிகளுடன் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டதன் மூலம் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருந்த வீரர்கள் அனைவரும் ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.