Breaking: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்த ஐசிசி
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி உறுப்பினரில் இருந்து இடைநீக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஐசிசி. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. ஐசிசியின் உறுப்பினராக இலங்கை கிரிக்கெட் வாரியமானது பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாகவும், அதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது ஐசிசி. முக்கியமாக எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு அரசின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பது முக்கியமான ஒரு விதிமுறை. அந்த விதிமுறையானது இலங்கையில் மீறப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது ஐசிசி. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி பங்குபெறும் அனைத்து போட்டிகளும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபபட்டிருக்கிறது.
பிரச்சினையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்:
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்குபெற்ற ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி. முக்கியமாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்விகளைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைப்பதாக அறிவித்தார் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர். ஆனால், உடனடியாக மேல்முறையீடு செய்து சில தினங்களிலேயே மீண்டும் இலங்கை கிரிக்கெட் வாரியம் செயல்பாட்டிற்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்தின் மீது அரசின் தலையீடுகள் இருந்ததே அந்நாட்டு கிரிக்கெட் வாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.