பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்
ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நீண்ட காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மேலும், இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்குப் பின் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வாரத்தில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக 92 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 23 ரன்களும் எடுத்ததன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய முகமது சிராஜ்
ஒருநாள் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்கள் மிகவும் பின்தங்கி இருந்த நிலையில், உலகக்கோப்பையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப் 10 இடங்களுக்குள் 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, முகமது சிராஜ் 2 இடங்கள் முன்னேறி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி உள்ளார். மேலும், சக இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திலும், முகமது ஷமி ஏழு இடங்கள் முன்னேறி 10வது இடத்திலும் உள்ளனர்.