'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி படுதோல்வியை பரிசாக வழங்கியுள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹென்றிச் கிளாசென் அதிரடியாக விளையாடி சதமடித்து 109 ரன்கள் குவித்த நிலையில், ரீசா ஹென்ரிக்ஸ்,வான் டர் டஸ்ஸன் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகிய மூன்று வீரர்கள் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
170 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
400 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் மாலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாக, லோயர் ஆர்டரில் களமிறங்கிய அட்கின்சன் (35) மற்றும் மார்க் வுட் (43) அணியை மீட்க முயற்சி செய்தனர். எனினும் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் போகவே இறுதியில் 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஒரு வெற்றியைத் தவிர மூன்றில் படுதோல்வியை சந்தித்துள்ளது.குறிப்பிடத்தக்கது.