BANvsAFG : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச கிரிக்கெட் அணி
சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் ஆப்கான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்தார். முதல் 3 விக்கெட்டுகளை இழக்க 112 ரன்களை எடுத்த ஆப்கானிஸ்தான், அதன் பின்னர் வங்கதேசத்தின் சுழலில் சிக்கி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பேட்டிங்கிலும் அசத்திய மெஹிதி ஹசன் மிராஸ்
157 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்சித் கான் 5 ரன்களிலும், லிட்டன் தாஸ் 13 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ ஆகிய இருவரும் அரைசதம் அடித்து வெற்றியை நோக்கி அணியை வழிநடத்தினர். இதில், மெஹிதி ஹசன் மிராஸ் 57 ரன்களில் அவுட்டான நிலையில், நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ கடைசி வரை அவுட்டாகாமல் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில், வங்கதேச அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மெஹிதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.