நேரத்தை வீணடித்தால் 5 ரன்கள் அபராதம்! கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஐசிசி; முழு விதிமுறைகள் இதோ
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேசப் போட்டிகளின் வேகத்தை அதிகரிக்கவும், நடுவர்களின் முடிவுகளில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், கிரிக்கெட் பந்துகளின் எடையை ஒரே சீராக மாற்றவும் பல புதிய விளையாடும் விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஆடவர் கிரிக்கெட் கமிட்டி மற்றும் கிளேயர் கோனர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் கமிட்டி இணைந்து தயாரித்த இந்த புதிய விதிகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கவுள்ள அனைத்து சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் இப்புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. மேரிபோன் கிரிக்கெட் கிளப்பின் கிரிக்கெட் விதிகளுக்கு ஏற்ப இவை திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
பேட்டர்களுக்கு அபராதம்
நேரத்தை வீணடிக்கும் பேட்டர்களுக்கு கடுமையான அபராதம்
போட்டியின் போது பேட்டர்கள் தேவையின்றி நேரத்தை வீணடிப்பதைக் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்டர் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயாராகவில்லை என்றால், முதல் முறை நடுவரால் எச்சரிக்கை விடுக்கப்படும்.
இரண்டாவது முறையும் அதே தவறை செய்தால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஆனால், மூன்றாவது மற்றும் அதற்குப் பிந்தைய முறைகளில் தவறு தொடர்ந்தால், பந்துவீசும் அணிக்கு நேரடியாக 5 அபராத ரன்கள் வழங்கப்படும்.
மேலும், தொடர்ச்சியாக நேரத்தை வீணடிக்கும் பேட்டர்கள் மீது ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
புதிய வரம்புகள்
மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் பந்துகளுக்கான புதிய வரம்புகள்
இதுவரை ஆடவர் கிரிக்கெட் பந்துகளுக்கு மட்டுமே துல்லியமான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகள் இருந்தன.
பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டிற்கு பந்து உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரியான அளவீடுகளில் பந்துகளை தயாரித்து வந்தனர்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின்படி, ஆண்கள், பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் என மூன்று தனித்தனி பிரிவுகளுக்கும் எடை மற்றும் அளவுகளில் துல்லியமான புதிய வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, மகளிர் கிரிக்கெட் பந்துகள் 142 கிராமிலிருந்து 149 கிராம் எடை வரை மட்டுமே இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
ரன்-அவுட் விதிகள்
ஓவர்த்ரோ மற்றும் ரன்-அவுட் விதிகளில் தெளிவுரைகள்
விக்கெட்டை வீழ்த்தும் நோக்கத்திலோ அல்லது ரன் அடிப்பதைத் தடுக்கும் நோக்கத்திலோ ஃபீல்டர் பந்தைக் கையில் எடுத்து ஸ்டம்பை நோக்கி எறியும் போது ஏற்படும் தவறுகளே ஓவர்த்ரோ எனக் கருதப்படும்.
ஃபீல்டர் பந்தைத் தடுக்க முயலும் போதோ அல்லது மற்றொரு ஃபீல்டருக்குப் பந்தைக் கைமாற்றும் போதோ ஏற்படும் சாதாரண தவறுகள் ஓவர்த்ரோவாக கருதப்படாது.
அதேபோல், ஒரு பேட்டரை ரன்-அவுட் அல்லது ஸ்டம்பிங் செய்யும் போது, ஃபீல்டர் அல்லது விக்கெட் கீப்பர் கையில் பந்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே அவுட் செல்லுபடியாகும்.
பந்து கையில் லேசாக உரசி சென்று ஸ்டம்பில் பட்டால் அது அவுட் அல்ல.
டெஸ்ட் கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பிரத்யேக மாற்றங்கள்
டெஸ்ட் போட்டிகளில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் அடிக்கடி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இரு அணிகளின் முன் கூட்டிய ஒப்புதலுடன் பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலேயே பிங்க் நிறப் பந்தை பயன்படுத்தலாம்.
ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இதற்கான முடிவை எடுக்க வேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் பந்தின் நிறத்தை மாற்ற முடியாது.
அதேபோல், டெஸ்ட் போட்டியில் நாளின் கடைசி ஓவரில் விக்கெட் வீழ்ந்தாலும், வானிலையும் வெளிச்சமும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த ஓவர் முழுமையாக வீசி முடிக்கப்படும்.
இது தேவையற்ற நேர விரயத்தைத் தடுப்பதுடன், பந்துவீசும் அணிக்கு சாதகமான சூழலையும் உருவாக்கும்.
புதிய அமைப்புகள்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய அமைப்புகள்
டி20 சர்வதேசப் போட்டிகளில் இனி இன்னிங்ஸ் இடைவேளை 15 நிமிடங்களாக நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழை அல்லது பிற காரணங்களால் போட்டியில் நேரம் குறைந்தால், இந்த இடைவேளை குறைந்தபட்சம் 10 நிமிடமாகக் குறைக்கப்படும்.
மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் டிரிங்க்ஸ் இடைவேளையின் போது, அணியின் தலைமைப் பயிற்சியாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர் மைதானத்திற்குள் சென்று வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
லெக் சைடில் வீசப்படும் பந்துகளுக்கான கடுமையான வைடு விதிமுறைகளும் வெள்ளைப் பந்து போட்டிகளில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.