
பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவரை அவரால் கோப்பையை வெல்ல முடியாது என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிடம் அனைத்து முறையும் தோல்வியே கண்டுள்ள நிலையில், இந்த முறையும் 191 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் பாபர் அசாம் அரைசதம் அடித்தாலும், அவரால் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியவில்லை.
இந்நிலையில், 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கவுதம் காம்பிர், அணிக்கு வெற்றியை ஈட்ட வேண்டுமானால் பாபர் அசாம் கிரிக்கெட் மீதான தனது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Gautam Gambhir analysis about Babar Azam Captaincy
பாபர் அசாம் குறித்து கவுதம் காம்பிர் கருத்து
ஸ்போர்ட்ஸ்கீடா தளத்திற்கு கவுதம் காம்பிர் அளித்த பேட்டியில், "பாபர் தனது ஆளுமை, குறிப்பாக அவரது ஆட்டம் மற்றும் அவரது மனநிலையை மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
புள்ளிவிவரங்களைப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. பாபர் அசாம் பாகிஸ்தானின் முன்னணி ரன் குவிப்பவராக மாறலாம்.
ஆனால் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம்தான் பாரம்பரியம் உருவாக்கப்படுகிறது, தனிப்பட்ட சாதனைகள் அல்ல. வாசிம் அக்ரம் 1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
அவர் ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் உலகக் கோப்பையை வென்றதால் எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்.
2011 இறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்த்தனவின் சதம் பற்றி யாரும் பேசவில்லை. போட்டியில் இந்தியா வென்றது அனைவருக்கும் நினைவிருக்கிறது." என்றார்.