விராட் கோலியுடனான மோதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த கவுதம் கம்பீர்
ஐபிஎல் 2023 தொடரின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான மோதலும் இருந்தது. இந்நிலையில், அந்த மோதல் சம்பவம் குறித்தும், எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலியுடனான தனது உறவு குறித்து கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2023 சீசனில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆலோசகர் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2013இல் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்தபோதும் இதுபோன்ற ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோதல் போக்கு குறித்து கவுதம் கம்பீர் பேசியதன் முழு விபரம்
போட்டியின்போது நடந்த வாக்குவாதம் குறித்து பேசிய கவுதம் கம்பீர், "எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி உடனான எனது உறவு ஒன்றுதான். தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. என்னைப் போலவே அவர்களும் வெற்றி பெற விரும்புகிறார்கள்." என்று கூறினார். மேலும், "நான் கிரிக்கெட் மைதானங்களில் பல சண்டைகளை சந்தித்திருக்கிறேன். நான் இதற்கு முன்பு சண்டையே போடாமல் இருந்தவன் அல்ல. அந்த சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே இருக்கும். வெளியில் அல்ல. நிறைய பேர் டிஆர்பிக்காக பலவிதமாக பேசியதால் இது குறித்து என்னை தெளிவுபடுத்தச் சொல்லி கேட்டனர். ஆனால் இரண்டு பேருக்கு இடையே நடந்த விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டியதில்லை." என்று விளக்கினார்.