பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள்
முன்னதாக நேற்று ஜூலை 28 இந்தியாவிற்கு ஒரு வரலாற்று நாளாக அமைந்தது. ஏனெனில் பதக்க பட்டியலில் இந்தியாவின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 ஆம் நாளில் மேலும் பல பதக்கங்களை சேர்க்கும் முனைப்பில் வீரர்கள் உள்ளனர். கடந்த வெள்ளியன்று கோலாகலமாய் துவங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி தொடரின் மூன்றாவது நாளான இன்று, ஜூலை 29, இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழு போட்டியில் அதிக பதக்கங்களைச் சேர்க்கும் நோக்கத்தில் மனு பாக்கர் மீண்டும் களமிறங்குவார். அதேபோல், பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகளும் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடிக்கும். மேலும் சில பிரகாசமான இளம் திறமைகள் மற்றும் பதக்க வாய்ப்புகள் ஜூலை 29 திங்கட்கிழமை ஒலிம்பிக் அரங்கில் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனு பாக்கர்
ஞாயிற்றுக்கிழமை தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு தற்போது குழு போட்டியிலும் அவர் சாதிப்பார் என பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். நேற்று, 22 வயதான அவர், துப்பாக்கிச் சுடுதல் பதக்கத்திற்காக 12 வருட காத்திருப்புக்கு முடிவுகட்டினார். இன்று 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு தகுதிச் சுற்றில் மீண்டும் அவர் இணைவார். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை வேதனையுடன் தவறவிட்ட சரப்ஜோத் சிங்குடன் அவர் இணைவார்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை வென்றபோது பி.ஆர்.ஸ்ரீஜேஷ்-ற்கு பலரும் நன்றி தெரிவித்தனர். திங்களன்று நடைபெறும் போட்டியில் 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்வதால், அவர்கள் இரண்டாவது வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் ஸ்ரீஜேஷ் ஓய்வை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், அணி அவருக்காக ஒன்றிணைந்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்ஷ்யா சென்
பேட்மிண்டன் போட்டியில், கெவின் கார்டனுக்கு எதிரான லக்ஷ்யா சென்னின் முதல் ஆட்டத்தின் போது, காயம் காரணமாக கெவின வெளியேறியதை அடுத்து, அது வெற்றிடமாக கருதப்பட்டது. இனி விளையாடவுள்ள ஒவ்வொரு ஆட்டமும் லக்ஷயாவுக்கு அதிக பங்கு வகிக்கும். ஏனெனில் அவர் அடுத்த சுற்றுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று லக்ஷ்யா சென் ஜூலியன் கராக்கியை எதிர்கொள்கிறார்.