ஒலிம்பிக் 2024: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் வரலாறு படைத்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த 22 வயது பெண்ணான மனு பாக்கர் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி பிரான்ஸ் தலைநகரில் உள்ள சாட்டௌரோக்ஸ் சுடுதல் மையத்தில் நடைபெற்றது.
ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர்
துப்பாக்கிச் சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான மனு பாக்கர் தனது கனவுகளை நிறைவேற்றி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. அபினவ் பிந்த்ரா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் குமார் மற்றும் ககன் நரங் ஆகியோருக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையை மனு பெற்றார்.