2024இல் மறுபிரவேசத்திற்கு தயார் என முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு
இரண்டு முறை யுஎஸ் ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா, 2024 தொடக்கத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் சீசனில் மீண்டும் தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 25 வயதான ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, செப்டம்பர் 2022 இல் டோரே பான் பசிபிக் ஓபனில் இருந்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். மேலும், ஜனவரியில் தனது கர்ப்பம் காரணமாக டென்னிஸிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்ததோடு, ஜூலை மாதம் தனது மகள் ஷாய்வைப் பெற்றெடுத்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் தொடருக்கு மத்தியில் நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் ஃபெல்ப்ஸுடன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது மறு அறிமுகம் குறித்து பேசியுள்ளார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நவோமி ஒசாகா
2024 ஆஸ்திரேலிய ஓபனில் தனது மறுபிரவேசத்தைத் தொடங்குவதாக நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, அந்த ஆண்டு டபிள்யூடிஏ போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். மேலும், "என் மகள் என்னைப் பற்றி பெருமிதம் கொண்டால் நன்றாக இருக்கும். நான் கோர்ட்டில் விளையாடுவதைப் பார்த்து, அட அது என் அம்மா என்று நினைக்கும் அளவுக்கு என் மகளுக்கு வயதாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என அவர் கூறினார். நவோமி ஒசாகா 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் யுஎஸ் ஓபனில் வெற்றியைப் பெற்றதன் மூலம் மொத்தமாக இதுவரை நான்கு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.