147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் சாதனை
வியாழக்கிழமை (செப்டம்பர் 26) நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் ரெட் பால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார். இந்த அரைசதம் மூலம், 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் எட்டு ஆட்டங்களில் 8 முறை ஐம்பதுக்கு மேல் ஸ்கோரைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை மெண்டிஸ் பெற்றார். 1877 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மாதிரியான நிலைத்தன்மையை எந்த கிரிக்கெட் வீரர்களாலும் வெளிப்படுத்த முடியவில்லை. மெண்டிஸ் இப்போது தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்களை விளாசியுள்ளார்.
கமிந்து மெண்டிஸ் சாதனை
பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல்
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் சவுத் ஷகீல், தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்களைப் பதிவுசெய்து இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக ஒரு முக்கியமான சதத்தை அடித்த பிறகு மெண்டிஸ் ஷகீலின் எண்ணிக்கையை சமன் செய்தார். இப்போது மற்றொரு அரைசதத்துடன் ஷகீலின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கிடையே தற்போது நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்திற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்துள்ளது.