சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம்
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியருக்கு பிரேசில் அதிகாரிகள் சுமார் ரூ.28.60 கோடி அபராதம் விதித்துள்ளனர். தென்கிழக்கு பிரேசிலில் தனது கடலோர ஆடம்பர வீட்டை கட்டும் போது, அவர் சுற்றுச்சூழல் விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. நண்ணீர் ஆதாரங்கள், பாறை மற்றும் மணலின் பயன்பாடு மற்றும் இயக்கத்தை நிர்வகிக்கும் விதிகளை மீறியதை அதிகாரிகள் விசாரணை நடத்தி உறுதி செய்ததை அடுத்து, அபராதம் விதிப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை (ஜூலை 3) வெளியிடப்பட்டது. நெய்மர், அனுமதி இல்லாமல் வீட்டை ஒட்டி ஒரு செயற்கை ஏரி மற்றும் நதி நீரை திருப்பிவிட்டு, புதிய கடற்கரையை உருவாக்கியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 நாட்களுக்குள் மேல்முறையீடு
தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த 20 நாட்களுக்குள் நெய்மர் மேல்முறையீடு செய்ய வேண்டும். நெய்மருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தவிர, உள்ளூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மாநில சிவில் போலீஸ் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்புகளாலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும். இதனால் நெய்மருக்கு மேலும் பல தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வலது கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்து தற்போது குணமடைந்து வரும் நெய்மர் ஓய்வில் இருந்து வருகிறார். பிஎஸ்ஜி அணியில் அவரது எதிர்காலம் சில காலமாக கேள்விக்குறியாக இருந்தபோதும் அவர் பிப்ரவரி முதல் எந்த போட்டி கால்பந்து விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.