ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள்
சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒலிம்பிக்கில் இருப்பதைப் போலவே ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சில வினோதமான விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சனிக்கிழமை (செப்டம்பர் 23) ஹாங்சோவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள ஐந்து அசாதாரண விளையாட்டுகளை இங்கே பார்க்கலாம். செபக் தக்ரா : தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த "ஃபுட் வாலிபால்" 1990இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வீரர்கள் தங்கள் உடல்களை வளைத்து, தங்கள் கால்கள், தலை அல்லது மார்பைப் பயன்படுத்தி ஒரு இலகுரக பிரம்பு பந்தை வலையின் மீது ஏவுவார்கள்.
குராஷ்
மல்யுத்தத்தின் பண்டைய வடிவமாக கருதப்படும் இது உஸ்பெகிஸ்தானில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுகாக விளையாடப்பட்டு வருவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். குராஷ் என்பது 14ஆம் நூற்றாண்டில் பேரரசராக மிகப்பெரிய நிலப்பரப்பை கட்டியாண்ட தைமூரின் வீரர்களுக்கான பயிற்சி நுட்பமாகும். தைமூரின் பேரரசு பெர்சியாவிலிருந்து மத்திய ஆசியா வரை பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் சுமோவைப் போன்ற சாயலும் இதில் இருந்தாலும், குராஷ் அடிப்படையில் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. இதில் விளையாடும் வீரர்கள் தங்கள் ஜூடோ போன்ற ஆடைகளால் எதிரிகளை தங்கள் முதுகின் பின்னால் எறிந்து அல்லது தள்ளி வெற்றி பெறுகின்றனர்.
கபடி
இந்தியாவின் பண்டைய விளையாட்டுகளில் ஒன்றான இது 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி ரசிகர்களின் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த விளையாட்டிற்கு யோகா போன்ற மூச்சுக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. தலா ஏழு வீரர்களை கொண்ட இரு அணிகள் போட்டியிடும் இதில், வீரர் எதிரணியின் களத்திற்குள் குறிப்பிட்ட தூரம் வரை சென்று அவர்களை தொட்டுவிட்டு திரும்புவதுதான் விளையாட்டாகும். அப்போது, "கபடி, கபடி" என்று கோஷமிட்டுக்கொண்டே வீரர்கள் செல்ல வேண்டும். 1990ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி சேர்க்கப்பட்டதில் இருந்து 2018க்கு முன்பு வரை அனைத்து முறையும் இந்தியாவே தங்கம் வென்றுள்ளது. 2018இல் மட்டும் இந்தியாவை வீழ்த்தி ஈரான் தங்கத்தை கைப்பற்றியது.
பிரிட்ஜ்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விளையாட்டு இதுதான். பிரிட்ஜ் என்பது சீட்டுக் கட்டுக்களைக் கொண்டு ஏலம், ட்ரம்ப்கள் மற்றும் தந்திரங்களின் மூலம் விளையாடப்படும் ஒரு சீட்டாட்டமாகும். இது ஜகார்த்தாவில் 2018இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. ஜகார்த்தாவில் போட்டியாளர்களின் வயது 11 முதல் 81 வரை நிர்ணயிக்கப்பட்டது. அதில் பங்குபெற்ற 78 வயதான இந்தோனேசிய கோடீஸ்வரர் மைக்கேல் பாம்பாங் ஹர்டோனோ வெண்கலம் வென்று அசத்தினார். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஒரு வருடம் கழித்து தனது ஆறாவது வயதில் இந்த விளையாட்டைத் தொடங்கிய அவர், மிக நீண்டகாலமாக இந்த விளையாட்டை விளையாடி வந்ததோடு ஆசிய விளையாட்டு மூலம் சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கமும் வென்றார்.
சியாங்கி
சீன சதுரங்கம் என அழைக்கப்படும் இது ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள சீனர்களால் விளையாடப்படுகிறது. யானை சதுரங்கம் என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு 2010இல் குவாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமான பிறகு, தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 2010இல் சீனா இரண்டு தங்கங்களை வென்றது. செஸ் போன்றே எதிரி ராஜாவை செக்மேட் செய்வது இந்த விளையாட்டின் அடிப்படையாக இருந்தாலும், இது இரண்டு துண்டு படைகளுக்கு இடையிலான போராக வடிவமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டு 8x8 என உள்ள நிலையில், இது 10x9 என உருவாக்கப்பட்டுள்ளது.