ஆசிய கோப்பையை எங்கே நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!
ஆசியக் கோப்பையை நடத்தும் நாடு எது என்பது குறித்த இறுதி முடிவை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பின்னர் எடுக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியை காண ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரநிதிநிதிகள் அகமதாபாத் வரவுள்ள நிலையில், அப்போது இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மத்திய அரசின் அனுமதியின்றி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என கைவிரித்து விட்டதால், போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹைபிரிட் மாடலை முன்மொழியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், பிசிபி தலைவர் நஜாம் சேத்தி, பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் நடத்தும் ஹைப்ரிட் மாடலை முன்மொழிந்தார். இதன்படி இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு பூர்வாங்க போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடும் நிலையில், இந்தியாவின் போட்டிகளை நடுநிலை மைதானங்களில் நடத்தும் திட்டத்தை அவர் முன்மொழிந்தார். ஆனால் ஹைபிரிட் முறையில் விளையாடுவது நடைமுறையில் அதிக சிக்கலை ஏற்படுத்தும் என சில நாடுகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் வேறு நாட்டில் முழுமையாக போட்டியை நடத்த ஆலோசனை தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் தற்போதுவரை போட்டி எங்கே நடக்கும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.