FIFA 2026: கால்பந்து விளையாட்டை மாற்றியமைக்கும் VAR தொழில்நுட்பம்; அர்ஜென்டினா - எகிப்து போட்டியில் சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கோல், அடுத்த சில விநாடிகளில் நடுவரின் ஒரு சிறிய சைகையால் ரத்து செய்யப்படுவது தற்போதைய நவீன கால்பந்து விளையாட்டின் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. விளையாட்டு போட்டிகளில் துல்லியமான முடிவுகளை எடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட VAR தொழில்நுட்பம், தற்பொழுது நடைபெற்று வரும் FIFA தொடரிலும் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்களால் கவனிக்க தவறவிடப்படும் முக்கியத் தவறுகளை திருத்துவதற்காக VAR குழு செயல்படுகிறது. மைதானத்திற்கு வெளியே பிரத்யேக அறையில் அமர்ந்திருக்கும் நடுவர் குழுவினர், பல்வேறு கேமரா கோணங்களின் உதவியுடன் ஆட்டத்தை கண்காணிப்பார்கள். கோல் அடித்தல், பெனால்டி வாய்ப்புகள், Red Card வழங்குதல் மற்றும் வீரர்களைத் தவறாக அடையாளம் காணுதல் ஆகிய நான்கு முக்கியச் சூழல்களில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் தலையிட அனுமதிக்கப்படுகிறது.
சர்ச்சை
உலகக்கோப்பையில் அர்ஜென்டினா - எகிப்து சர்ச்சை
நடப்பு உலகக்கோப்பை தொடரின் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றில் அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் VAR தொழில்நுட்பத்தின் மீதான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இப்போட்டியில் எகிப்து அணி அடித்த முக்கியமான கோல் ஒன்று, ஆட்டத்தின் முந்தைய பகுதியில் நிகழ்ந்த விதிமீறலை காரணம் காட்டி விஏஆர் மூலம் ரத்து செய்யப்பட்டது. இம்முடிவு எகிப்து அணியின் பயிற்சியாளர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், தொழில்நுட்பத்தின் நடுநிலைமை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
துல்லியம்
மில்லிமீட்டர் துல்லியமும் மனித முடிவுகளும்
தற்போதைய காலகட்டத்தில் 'ஆஃப்சைட்' முடிவுகள் மில்லிமீட்டர் அளவிலான துல்லியத்துடன் கணக்கிடப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக இவை சரியான முடிவுகளாக இருந்தாலும், விளையாட்டின் இயல்பான கொண்டாட்டங்களை இவை முடக்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், இறுதி முடிவுகளை எடுப்பதில் மனிதர்களின் தலையீடு இன்னும் நீடிப்பதால், தொழில்நுட்பம் முழுமையான தீர்வைத் தரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. விஏஆர் தொழில்நுட்பம் கால்பந்து விளையாட்டின் பிழைகளைக் கணிசமாகக் குறைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், அது விளையாட்டின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்ட தருணங்களைக் குறைத்து, ரசிகர்களிடையே ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. துல்லியமான முடிவுகளுக்கும் விளையாட்டின் சுவாரசியத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.