கால்பந்து ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! 2026 உலகக் கோப்பையில் 3 மெகா தொடக்க விழாக்கள்
செய்தி முன்னோட்டம்
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரானது, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் தலா ஒரு தொடக்க விழா என மொத்தம் மூன்று பிரம்மாண்டமான கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கவுள்ளது. ஜூன் 11 அன்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் (அஸ்டெகா மைதானம்) நடைபெறும் முதல் ஆட்டத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக முதல் தொடக்க விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 12 அன்று கனடாவின் டொராண்டோவிலும், அதே நாள் மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் அடுத்தடுத்த தொடக்க விழாக்கள் நடத்தப்படும் என்று ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விழாக்கள் அந்தந்த நாடுகளின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் கால்பந்து விளையாட்டின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும் என பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ
மெக்சிகோவில் லத்தீன் இசையுடன் தொடங்கவுள்ள கால்பந்து திருவிழா
மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு முன்னதாக மெக்சிகோவில் நடைபெறும் விழாவில் லத்தீன் அமெரிக்காவின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் புகழ்பெற்ற கொலம்பிய பாடகர் ஜே பால்வின், மெக்சிகோ ராக் பேண்ட் குழுவான மானா மற்றும் பாப் நட்சத்திரம் அலெஜான்ட்ரோ பெர்னாண்டஸ் ஆகியோர் மேடையை அலங்கரிக்க உள்ளனர். மேலும், மெக்சிகோவின் பாப் இளவரசி பெலிண்டா, லிலா டவுன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க பாடகர் டைலா உள்ளிட்டோரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்தத் தொடக்க விழாவானது உலகளாவிய கொண்டாட்டத்தின் ஒரு வலிமையான தொடக்கமாக இருக்கும் என்று ஃபிஃபா தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடா
கனடாவின் டொராண்டோவில் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் கொண்டாட்டங்கள்
கனடா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன்னதாக ஜூன் 12 அன்று டொராண்டோவில் இரண்டாவது தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அலானிஸ் மோரிசெட், மைக்கேல் பப்பில், அலெசியா காரா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட சர்வதேசப் புகழ் பெற்ற கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். கனடாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பயணமாக இந்த விழா அமையும் என்று அமைப்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். கால்பந்து மற்றும் இசையின் மூலம் கனடாவின் தனித்துவமான அடையாளத்தை உலகுக்குக் காட்ட இந்த விழா ஒரு சிறந்த தளமாக அமையும்.
அமெரிக்கா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மெகா ஈவென்ட்
அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மூன்றாவது தொடக்க விழா பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி, ராப்பர் பியூச்சர், பிளாக்பிங்க் குழுவின் லிசா மற்றும் பிரேசில் நட்சத்திரம் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா அமையும் என்று பிஃபா தலைவர் இன்ஃபான்டினோ கூறியுள்ளார். இசை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் ஒரு மாபெரும் நிகழ்வாக இது அமையப்போகிறது.
உலககக்கோப்பை தொடர்
ரசிகர்களின் பங்களிப்பு மற்றும் உலகளாவிய பிணைப்பு
சுமார் ஆறு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் ரசிகர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமின்றி, தொடக்க விழாக்களில் நேரடிப் பங்களிப்பையும் வழங்குவார்கள் என்று அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 'ஒரே இதயத்துடிப்பு' (shared heartbeat) என்ற மையக்கருத்தின் அடிப்படையில் எல்லைகள் மற்றும் நேர மண்டலங்களைக் கடந்து அனைத்து மக்களையும் இந்த விழாக்கள் ஒன்றிணைக்கும். இதற்காகப் ரசிகர்கள் மைதானங்களுக்கு முன்கூட்டியே வர ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெனிசுலாவின் டேனி ஓஷன் மற்றும் வங்கதேச-அமெரிக்கரான சஞ்சய் போன்ற கலைஞர்களும் இந்த விளையாட்டுத் திருவிழாவிற்கு மேலும் மெருகூட்ட உள்ளனர்.