ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, மழையால் ஆட்டம் தலா 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த இலங்கை அணியும் 42 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்த நிலையில், அந்த அணி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் குழம்பித் தவிக்கின்றனர்.
டக்வொர்த் லூயிஸ் முறையால் பாகிஸ்தானுக்கு ஒரு ரன் இழப்பு
மழை காரணமாக போட்டி தொடங்கும்போது தலா 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. பின்னர் பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 27.4 ஓவர்களில் 130/5 என இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் போட்டி தலா 42 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்களை எடுத்த நிலையில், டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டின்படி 1 ரன் கழிக்கப்பட்டது. இதனால்தான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலக்காக 252 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டில் விக்கெட்டை கைவசம் வைத்திருப்பது முக்கியம் எனும் நிலையில், 28வது ஓவரில் போட்டி இடைநிறுத்தப்படும் முன் முகமது நவாஸின் விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் இலங்கையின் இலக்கு 252 ரன்களுக்குப் பதிலாக 255 ரன்களாக இருந்திருக்கும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்