ENGvsSA : தென்னாப்பிரிக்கா பேட்டிங் அபாரம்; இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு
சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 400 ரன்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குயின்டன் டி காக் வெறும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் சிறப்பான கூட்டணியை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் 60 ரன்களும் எடுத்தனர்.
சதமடித்த ஹென்ரிச் கிளாசென்
ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டஸ்ஸென் வெளியேறிய நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஐடென் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஐடென் மார்க்ரம் 42 ரன்களில் வெளியேறினாலும், ஹென்ரிச் கிளாசென் நிலைத்து நின்று சதமடித்து 109 ரன்கள் குவித்தார். மேலும், அவரைத் தொடர்ந்து மார்கோ ஜான்சனும் அரைசதமடித்து 75 ரன்கள் குவிக்க தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது அதிகபட்ச ஸ்கோரை தென்னாப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டோப்லி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.