ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. மேலும், இந்த இன்னிங்சின் மூலம் இங்கிலாந்து உலகக்கோப்பை மட்டுமல்லாது, ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு அணியும் செய்யாத சாதனையை செய்துள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் 11 வீரர்களும் களத்தில் பேட்டிங் செய்த நிலையில், ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். மேலும், குறைந்தபட்சமாக மொயீன் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 11 ரன்கள் எடுத்தனர்.
ஒரு இன்னிங்ஸில் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்த முதல் அணி
இங்கிலாந்து அணிக்காக இந்த இன்னிங்ஸில் விளையாடிய 11 வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். இதன் மூலம், உலகக்கோப்பை மட்டுமல்லாது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 11 வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இதற்கு முன்னர், ஒரு அணியில் 10 வீரர்கள் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்திருந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்தியா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா ஒரு முறையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.