ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 285 ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர். இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் அபாரமாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். இப்ராஹிம் சத்ரான் 28 ரன்களில் வெளியேறினார்.
மிடில் ஆர்டரில் கலக்கிய இக்ராம் அலிகில்
ஆப்கான் கிரிக்கெட் அணி நல்ல தொடக்கத்தை அமைத்தாலும், அவர்களுக்கு பிறகு களமிறங்கிய ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி தடுமாறியது. எனினும், அதன் பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய இக்ராம் அலிகில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்த இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.