ENG vs BAN: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார். முதலாவதாக ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 17வது ஓவரில் 52 ரன்களுக்கு பேர்ஸ்ட் ஆட்டமிழக்க, மூன்றாவதாகக் களமிறங்கிய ஜோ ரூட்டும் பேர்ஸ்டோ விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார். 37வது ஓவர் வரை விக்கெட்டுகளை இழக்காமல் 266 ரன்களைக் குவித்திருந்தது இங்கிலாந்து. ஆனால், 37வது ஓவரில் டேவிட் மலான் ஆட்டமிழந்த பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
சதம் கடந்த டேவிட் மலான்:
இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் 107 பந்துகளில் 140 ரன்களைக் குவித்து சிறப்பான ஆட்டத்தை ஆடிச் சென்றார். மூன்றாவதாகக் களமிறங்கிய ஜோ ரூட்டும் 68 பந்துகளில் 82 ரன்களைக் குவித்தார். முதல் மூன்று பேட்டர்களுக்கு பிறகு களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் யாருமே 20 ரன்களைக் கடக்கவில்லை. வங்கதேசத்திற்கு எதிராக இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்களையே குவித்திருந்தது அந்த அணி. வங்கதேச அணியின் சார்பில் மகெடி ஹாசன் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். 365 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்ய இரண்டாவதாகக் களமிறங்கியது வங்கதேசம்.
சொதப்பிய வங்கதேச பேட்டர்கள்:
வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் தவிர மற்ற அனைவருமே சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இரண்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கத் தொடங்கியது வங்கதேசம். ஆனால், அதனை கரையேற்றத்தான் பேட்டர்கள் யாருமில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம், இறுதியில் 48.2 ஓவர்கள் முடிவில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணியின் சார்பில் ரீஸ் டாப்லி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மார்க் வுட் 2.90 என்ற எகானமியுடன் ரன்ரேட்டை கட்டுப்படுத்தியிருந்தார். நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து.