சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்பு : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு சிக்கல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆன்லைன் பந்தய விளம்பரங்களில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியதா என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது. பிரெண்டன் மெக்கல்லம் ஜனவரி மாதம் பந்தய நிறுவனமான '22Bet' இல் தூதராக சேர்ந்த பிறகு ஆன்லைன் விளம்பரங்களில் தோன்றினார். மார்ச் 27 அன்று ஐபிஎல்லில் 22Bet இன் சந்தைகளை ஊக்குவிக்கும் வீடியோவை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தான் பிரெண்டன் மெக்கல்லம் மீதான சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிரெண்டன் மெக்கல்லம் மீது நடவடிக்கை எடுக்குமா?
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "நாங்கள் இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறோம். 22bet உடனான அவரது உறவைப் பற்றி பிரெண்டனுடன் விவாதித்து வருகிறோம்." என்று கூறியுள்ளது. "சூதாட்டம் குறித்து எங்களிடம் விதிகள் உள்ளன. அவை எப்போதும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய முயல்வோம். எனினும், பிரெண்டன் மெக்கல்லம் தற்போது எந்த விசாரணையிலும் இல்லை." என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக நியூசிலாந்தின் ப்ராப்ளம் சூதாட்ட அறக்கட்டளை கடந்த வாரம் விளம்பரங்கள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த கோடையின் தொடக்கத்தில் மெக்கல்லம் பயிற்சியாளராக ஆனதில் இருந்து இங்கிலாந்து கடைசியாக விளையாடிய 12 டெஸ்டில் 10ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.