'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது?
நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அந்த இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது பெரும் சர்ச்சையை துவங்கியுள்ளது. இதனை அடுத்து, செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்றத்தை ஆளும் பாஜக கட்சியை ஆதரிக்கும் சிலர் வரவேற்கும் நிலையில், இது அவசியமற்ற ஒன்று என பலரும் கூறி வருகின்றனர்.
இதில் தோனி எப்படி சிக்கினார்?
இந்த நிலையில் கிரிக்கெட் வீரரும், CSK அணியின் கேப்டனும் ஆன மகேந்திர சிங் தோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பு புகைப்படமாக, 'பாரதத்தை சேர்த்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என பொருள்படும் வாசகம் இடம்பெற்றுள்ளது. உடனே சில விஷமிகள், அவர் ஆளும் மத்திய அரசிற்கு அதரவாகத்தான் இந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் என பரப்ப தொடங்கினர். தன்னுடைய தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் எப்போதும் தோனி தெரிவித்ததில்லை. தற்போது அவரின் புகைப்பட பதிவிற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தோண்டியபோது தான் தெரிந்தது, அந்த புகைப்படம், சுதந்திர தினத்தன்று அவர் பதிவேற்றியது என்று. இப்போது நடக்கும் பெயர் சர்ச்சைக்கும், 'தல' தோனிக்கும் சம்மந்தம் கிடையாது.