விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி!
இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ஏஎஸ்சிஐ) நிர்ணயித்த விளம்பர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் விளம்பரங்களின் பயன்பாட்டை மேற்பார்வையிடும் மற்றும் உறுதி செய்யும் சுய ஒழுங்குமுறை அமைப்பான ஏஎஸ்சிஐ, புதன்கிழமை (மே 17) அரையாண்டு புகார் அறிக்கையை வெளியிட்டது. ஏஎஸ்சிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கேமிங் பிரிவில் டிக்டோக் ஸ்கில் கேம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற விளம்பரதார் அளித்த புகாரில் விதிகளுக்கு இணங்காத பிரபலங்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார்.
முந்தைய ஆண்டை விட 2022-23இல் அதிக புகார்கள்
எம்எஸ் தோனி விதிகளை மீறியதாக 10 புகார்கள் வந்துள்ள நிலையில், கேலக்டஸ் ஃபன்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற விளம்பரதாரரின் கீழ் பணியாற்றிய விராட் கோலி ஐந்து முறை வீதிகளை மீறியதாக புகார் வந்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றும்போது, தங்களின் ஒப்பந்தங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஏஎஸ்சிஐ'ஆல் விசாரிக்கப்பட்ட 97 சதவீத வழக்குகளில் ஒப்பந்தங்கள் குறித்து பிரபலங்களுக்கு எந்த தெளிவும் இல்லை என தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டில் பதிவான 55 புகார்களுடன் ஒப்பிடும்போது, பிரபலங்கள் சம்பந்தப்பட்ட 503 புகார்கள் 2022-23 இல் பதிவாகியுள்ளதாக விளம்பர ஒழுங்குமுறை அமைப்பான ஏஎஸ்சிஐ தெரிவித்துள்ளது.