ஐபிஎல் 2023 : வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஐபிஎல் 2023 வர்ணனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை (மே 26) நடக்கும் குவாலிஃபையர் 2 மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடக்கும் ஐபிஎல் 2023 இன் இறுதிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு ஃபாஃப் டு பிளெசிஸ் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் வர்ணனை குழுவில் இணைவார். முன்னதாக ஃபாஃப் டு பிளெசிஸ், லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியைத் தழுவி வெளியேறிய நிலையில் தாங்கள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் தகுதி கொண்டவர்கள் அல்ல என்றும் உருக்கமாக பேசியிருந்தார்.
வர்ணனையாளர்களாக மாறும் வீரர்கள்
பிளேஆப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், ஐபிஎல் 2023 உடன் தனது தொடர்பைத் தொடரும் வகையில், வர்ணனை குழுவில் இடம் பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் 2023 சீசனில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அணியில் இணைவதற்கு நான் உற்சாகமாக உள்ளேன் என்று ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். அவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளதால் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்தே வர்ணனை செய்ய உள்ளார். இதேபோல் முன்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் இவ்வாறு வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிக்கான தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பிடித்துள்ளார்.