சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே
கிரிக்கெட் வரலாற்றில் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட்டர் என்ற பெருமையை டேனியல் மெக்கஹே பெற உள்ளார். 2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் செப்டம்பர் 4 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் கனடா அணியில் டேனியல் மெக்கஹே விளையாட உள்ளார். 29 வயதான அவர் பெண் திருநங்கைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்ணயித்த அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்ததை அடுத்து அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்த டேனியல் மெக்கஹே பிப்ரவரி 2020இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் மே 2021இல் மருத்துவ ரீதியாக ஆணிலிருந்து பெண்ணாக மாறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் திருநங்கைகள் பங்கேற்பதற்கான ஐசிசி விதிகள்
ஐசிசியின் விதிகளைப் பொருத்தவரை, மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் திருநங்கை ஒருவர் தனது சீரம் டெஸ்டோஸ்டிரோனின் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 5 nmol/L1 க்கும் குறைவாக இருப்பதை நிரூபிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட திருநங்கை பெண், தான் விளையாடும் வரை சீரம் டெஸ்டோஸ்டிரோனின் செறிவை அதே நிலையில் வைத்திருக்க தயாராகவும் இருக்க வேண்டும். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை வீரர் தனது பாலின அடையாளம் பெண் என்று நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிக்கு திருப்திகரமான வடிவத்தில் எழுதப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட அறிவிப்பை வழங்க வேண்டும் என்பதை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது. ஐசிசி திருநங்கைகள் பங்கேற்க தகுதிகளை வைத்திருந்தாலும், நீச்சல் மற்றும் ரக்பி போன்ற விளையாட்டுக்களில் திருநங்கைகள் பங்கேற்க தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.