பிரகாசமாகும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு: நேற்றைய போட்டியின் சுவாரசிய நிகழ்வுகள்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கம் முதலே போட்டியினை தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொண்ட சிஎஸ்கே, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியினை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது சிஎஸ்கே அணி. இதுவரை நடைபெற்றுள்ள 13 ஆட்டங்களில், சிஎஸ்கே, 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள், 0.528 நிகர ரன் ரேட்டுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. எனினும், அடுத்தாக சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வரும் 18-ம்தேதி விளையாடுகிறது. அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அரையிறுதிக்கு முழுமையாக தகுதி பெறும்.
நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ்
நேற்று நடைபெற்ற ஹோம் கிரௌண்ட் போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவின் 50-வது வெற்றியாக இது அமைந்தது. இதுவரை, இந்த மைதானத்தில் 71 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 50 வெற்றி, 21 தோல்வியை பதிவு செய்துள்ளது. 50-வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே வீரர்களுக்கு அணி நிர்வாகம் விருது வழங்கி கௌரவித்தது. போட்டி நிறைவடைந்ததும், ரசிகர்களை மைதானத்திலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதோடு, சிஎஸ்கே ரசிகர்களுக்கும் CSK அணி சர்ப்ரைஸ் அறிவித்தது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை வலம் வந்தபடி, ரசிகர்களின் இருப்பிடத்தை நோக்கி பந்துகள், டீ ஷர்ட்கள் போன்ற நினைவு பரிசுகளை தூக்கி எறிந்தனர். பல CSK ரசிகர்கள் இவற்றை பறந்து பறந்து பிடித்துக்கொண்டனர்