'உலகின் டாப் 5 லீக்குகளில் ஒன்றாக சவூதி புரோ லீக் மாறும்' : கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை!
போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி புரோ லீக் உலகின் டாப் ஐந்து லீக்குகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக 200 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தின் பேரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜனவரி மாதம் சவூதி புரோ லீக் கால்பந்து அணியான அல்-நாசருடன் இணைந்தார். ஸ்பெயினின் லா லிகாவில் ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் இத்தாலியின் சீரி ஏவில் ஜுவென்டஸ் ஆகியவற்றில் ரொனால்டோ ஏற்கனவே விளையாடியுள்ளார். இந்த மூன்று லீக்குகளும் உலகின் தலைசிறந்த கால்பந்து லீக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி புரோ லீக் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி
சவூதி புரோ லீக் போட்டியின் தரம் குறுகிய காலத்தில் மேம்பட்டதாக தெரிவித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, "நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சவூதி லீக் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும்." என்று செவ்வாயன்று (மே 23) சவூதி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும். "படிப்படியாக, இந்த லீக் உலகின் முதல் ஐந்து லீக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு நேரம், வீரர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவை. ஆனால் இந்த நாட்டில் அற்புதமான ஆற்றல் உள்ளது என்று நான் நம்புகிறேன்." என்று அவர் மேலும் கூறினார். இதற்கிடையே மற்றொரு முக்கிய வீரரான லியோனல் மெஸ்ஸியும் விரைவில் சவூதி புரோ லீக்கில் இணைவார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.