கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு
கிரிக்கெட்டில் பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே போட்டிக் கட்டணத்தை வழங்குவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெறுகிறது. தென்னாப்பிரிக்கா முழுவதும் உள்ள கிரிக்கெட்டின் முன்னணி நபர்கள் செவ்வாயன்று (ஆகஸ்ட் 22) ஷ்வானில் கூடி, இந்த முடிவை அறிவித்தனர். மேலும், தங்கள் உள்நாட்டு மகளிர் போட்டிக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பையும் அப்போது வெளியிட்டனர். முன்னதாக, ஐசிசியும் தான் நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் ஆடவர் மற்றும் மகளிருக்கு ஒரே போட்டிக் கட்டணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முதல் அமலுக்கு வருகிறது சம ஊதியம்
தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஆடவருக்கு நிகரான போட்டிக் கட்டணத்தை அறிவித்துள்ள நிலையில், இது செப்டம்பர் 1 முதல் தொடங்கும் பாகிஸ்தான் தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது. தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி செப்டம்பர் 1 முதல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளிலும், அதே மைதானத்தில் செப்டம்பர் 8 முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் சிஎஸ்ஏ டி20 மகளிர் லீக் கிரிக்கெட்டையும் அறிமுகப்படுத்த உள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், உள்நாட்டில் உள்ள திறமையான இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை வளர்த்தெடுக்க முடியும் என நம்புவதாக கிரிக்கெட் வாரிய சிஇஓ ஃபோலெட்ஸி மொசெக்கி தெரிவித்துள்ளார்.