2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பரிந்துரைத்தது.
இதையடுத்து கிரிக்கெட் போட்டியை சேர்க்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.
கிரிக்கெட் தவிர, ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய போட்டிகளையும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ளது.
அப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக ஒப்புதல் வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cricket to be included in 2028 Olympics
ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை இடம் பெற்ற கிரிக்கெட்
1896 ஆம் ஆண்டு நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டே கிரிக்கெட் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால், போதுமான அளவு அணிகள் இடம் பெறாததால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 1900 ஆம் ஆண்டு பாரிஸில் 18 விளையாட்டுகளில் ஒன்றாக விளையாடப்பட்டதே, கிரிக்கெட் ஒலிம்பிக்கில் முதல் மற்றும் கடைசி முறையாக இடம் பெற்றதாகும்.
அந்த ஒலிம்பிக்கில் பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் பின்வாங்கிய நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே ஒரே ஒரு போட்டி மட்டும் நடத்தப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி வழங்கப்பட்டது.
அந்த போட்டியில், ஒவ்வொரு பக்கத்திலும் 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்கள் இருந்தனர்.