உலக பேட்மிண்டன் தரவரிசையில் 3ம் இடத்திற்கு முன்னேறிய சாத்விக் & சிராக் ஜோடி
செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில், இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 போட்டியில் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். தரவரிசையில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியின் அதிகபட்ச ரேங்க் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய ஓபனை வென்றதன் மூலம் அனைத்து பிடபிள்யூஎப் சூப்பர் பட்டங்களையும் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்றுள்ளனர்.
தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி எந்த மாற்றமும் இன்றி 16வது இடத்தில் நீடிக்கும் நிலையில், அஷ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் இரண்டு இடங்கள் சரிந்து 41வது இடத்தில்உள்ளனர். இந்திய கலப்பு ஜோடியான ரோஹன் கபூர் மற்றும் சிக்கி ரெட்டி இரண்டு இடங்கள் முன்னேறி உலக 33வது இடத்தைப் பிடித்தனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், கிடாம்பி ஸ்ரீகாந்த் மூன்று இடங்கள் முன்னேறி 19வது இடத்தைப் பிடித்தார். லக்ஷ்யா சென் 18வது இடத்தில் உள்ளார். பிரணாய் எச்.எஸ். உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.