சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு!
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு ஸ்குவாஷ் உலக கோப்பை ஜூன் 13 முதல் 17 வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் இந்திய ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் நடைபெறும் என திங்கட்கிழமை (மே 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கொலம்பியா ஆகிய 9 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
போட்டியை நடத்த ரூ.1.5 கோடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நடந்த உலகக்கோப்பை போட்டியை நடத்துவது குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் சென்ட்ரல் ஏட்ரியம் அதிநவீன அனைத்து கண்ணாடி மைதானமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். மேலும் நிகழ்ச்சியை நடத்துவதற்காக இந்த ஸ்குவாஷ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ராமச்சந்திரனிடம் ₹1.5 கோடிக்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழக ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் சவுரவ் கோசல், அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.