ரூ.230 கோடி நிகர லாபம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வருமானம் 340% அதிகரிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டில் நிகர லாபம் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் ரூ.52 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் வருவாய் ரூ.229.20 கோடியாக உயர்ந்துள்ளது. பிசிசிஐயின் மைய உரிமைகள் மற்றும் டிக்கெட் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, வருவாயில் அதிகரிப்பு லாபம் அதிகரித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸின் ஒட்டுமொத்த வருவாய் 131% அதிகரித்து ரூ.676.40 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.292.34 கோடியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் நிர்வாக இயக்குனராகத் தொடரும் கே.எஸ்.விஸ்வநாதன், போர்டு தீர்மானத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 27, 2024 இல் திட்டமிடப்பட்ட நிறுவனத்தின் 10வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார்.
துணை நிறுவனம் விரிவாக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸின் துணை நிறுவனமான சூப்பர்கிங் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (எஸ்விபிஎல்) மூலம் விரிவாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால், நிறுவனம் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. எஸ்விபிஎல் தற்போது தமிழகத்தில் ஒன்பது மையங்களாகவும், இரண்டு சர்வதேச மையங்களாகவும் வளர்ந்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் உள்ள அதன் கிரிக்கெட் அகாடமிகள் 1,100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கியுள்ளன. அவர்களில் 19 பேர் பல்வேறு வயது பிரிவுகளில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இது குறித்து நிறுவனம் கூறுகையில், "அணிக்கு மட்டுமல்ல, பரந்த கிரிக்கெட் சமூகத்திற்கும் பயனளிக்கும் ஒரு வலுவான மேம்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளது.