இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்
செய்தி முன்னோட்டம்
பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவரும், தேர்வாளர்கள் குழுவில் உள்ளவருமான முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் சலீல் அன்கோலாவை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்தான் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ விதிப்படி ஒரே மண்டலத்தில் இருந்து இரண்டு பேர் தேர்வாளர்கள் குழுவில் இடம் பெற முடியாது.
இந்நிலையில், இந்தியா மற்றும் மும்பை அணியின் முன்னாள் கேப்டனான அஜித் அகர்கர், சில மாதங்களுக்கு முன்பு தேர்வுக் குழுவின் புதிய தலைவராக பணியாற்ற பிசிசிஐ'யால் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் இருவரில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BCCI AGM meeting on september 25th
ஆண்டு பொதுக்கூட்டத்தில் முடிவு
தற்போதைய பிசிசிஐ ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் அஜித் அகர்கர், எஸ்எஸ் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, எஸ் ஷரத் மற்றும் சலில் அன்கோலா ஆகியோர் உள்ளனர்.
அவர்களுக்கு ஒருவருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் வரை அந்த பொறுப்பில் இருப்பர்.
இந்நிலையில், பிசிசிஐ விதிப்படி சலில் அன்கோலாவை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, கோவாவில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் அதன் 92வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த கூட்டம் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறுவதால், உலகக்கோப்பை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முழுநேர தலைமை பயிற்சியாளர், ஐபிஎல் 2024 பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.