திருநங்கைகளுக்கு தடை விதித்த ஐசிசி; சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேனியல் மெக்கஹே ஓய்வு
கனடா சார்பாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் திருநங்கை வீராங்கனை டேனியல் மெக்கஹே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அன்று திருநங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தடை விதித்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதெல்லாம் ஐசிசியின் தீர்ப்பு மற்றும் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்ப்பதற்கான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இதயப்பூர்வமான பதிவில், ஐசிசியின் உத்தரவு செவ்வாய்க்கிழமை வந்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று டேனியல் மெக்கஹே கூறினார்.
ஐசிசி திருநங்கைகளுக்கு தடை விதித்ததன் பின்னணி
டிட்ஸ் மருத்துவ ஆலோசனைக் குழு திருநங்கைகளை மகளிர் கிரிக்கெட்டில் அனுமதிப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அது குறித்து ஒன்பது மாதங்களாக அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கலந்தாலோசித்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐசிசி வாரிய கூட்டத்தில் திருநங்கைகளை தடை விதிப்பதற்கான முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, ஆணாக இருந்து அறுவை சிகிச்சை செய்து முழுமையாக பெண்ணாக மாறி இருந்தாலும் அனைத்து திருநங்கைகளையும் மகளிர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதித்துள்ளது. எனினும், இந்த உத்தரவு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்துள்ள ஐசிசி, அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் உள்ளூர் சட்ட விதிகளின்படி திருநங்கைகளை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.