உலக பேட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஜோடி!
இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சமீபத்திய இரட்டையர் BWF உலக தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். முன்னர் அவர்கள் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஒரு இடம் முன்னேறி தங்களது கேரியரில் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர். ஏப்ரலில் நடந்த பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் சாத்விக்-சிராக் முன்னேற்றம் பெற்றனர். கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ், சூப்பர் 500 போட்டியைத் தவறவிட்ட நிலையில் இந்த ஜோடி தாய்லாந்து ஓபன் சூப்பர் 500இல் மீண்டும் களமிறங்க உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிக் காலத்தில் தாய்லாந்து ஓபன் அவர்களின் முதல் போட்டியாகும்.
ஒற்றையர் பிரிவு தரவரிசையிலும் இந்திய வீரர்கள் முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் எச்.எஸ். கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸில் தனது முதல் உலக டூர் பட்டத்தை வென்ற நிலையில், உலக தரவரிசையில் தனது கேரியரில் மிகச்சிறந்த எட்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைத் தொடர்ந்து கிடாம்பி ஸ்ரீகாந்த் 20வது இடத்திலும், லக்ஷ்யா சென் உலக தரவரிசையில் 23வது இடத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 13வது இடத்தில் உள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் 15வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் கபூர் மற்றும் என்.சிக்கி ரெட்டி ஜோடி 35வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தனிஷா க்ராஸ்டோ மற்றும் இஷான் பட்நாகர் ஜோடி 39வது இடத்திற்கு தள்ளப்பட்டது.