பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்கான போட்டி மைதானங்களை மாற்றக்கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. போட்டிக்கான வரைவு அட்டவணை தயார் செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளுக்கான மைதானங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு
செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) ஐசிசி மற்றும் பிசிசிஐ ஒரு கூட்டத்தை நடத்தி விவாதித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பரிந்துரையை மறுப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தன. ஒரு மைதானம் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல எனக் கருதப்பட்டாலோ அல்லது பாதுகாப்புக் கவலைகள் இருந்தாலோ மட்டுமே மைதான மாற்றங்கள் பரிசீலிக்கப்படும். ஆனால் அது தொடர்பான எந்த காரணங்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவிக்காததால், கோரிக்கையை நிராகரிக்கும் முடிவை ஐசிசி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே பிசிசிஐ சமர்ப்பித்த வரைவு அட்டவணை மீது ஐசிசி உறுப்பு நாடுகள் பரிந்துரையை சமர்ப்பித்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.