பார்வையற்றோர் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களுடன் நடுவர் சர்ச்சை சைகை - இந்தியா கண்டனம்
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2026 பார்வையற்றோருக்கான ஆடவர் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து பாகிஸ்தான் நடுவர் ஒருவர் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு நொறுங்குவது போன்ற சைகைகளைச் செய்து கொண்டாட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் நடுவராகப் பணியாற்றிய ஒருவரே, பாகிஸ்தான் அணியுடன் இணைந்து சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டியதற்கு இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நடுவர்கள் எப்போதும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், எந்தவொரு அணிக்கும் ஆதரவாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் CABI கடுமையாகச் சாடியுள்ளது. முன்னதாக 2025 ஆசியக் கோப்பையின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் இதேபோன்ற சைகைகளைக் காட்டி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
புறக்கணிப்பு
கோப்பை விழாவை புறக்கணித்த இந்தியா
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த இறுதிப்போட்டி கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தான நிலையில், கூடுதல் நாள் இல்லாததால் இரு அணிகளையும் கூட்டாக வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.
ஆனால், உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையை மீறி, அதன் தலைவரும் பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சுல்தான் ஷா, நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானைச் சாம்பியனாக அறிவிக்கச் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீரர்கள் கோப்பை வழங்கும் விழாவைப் புறக்கணித்ததுடன், "களத்தில் வெல்ல முடியாத போதெல்லாம் பாகிஸ்தான் இத்தகைய கீழ்த்தரமான தந்திரங்களைக் கையாளுவது வெட்கக்கேடானது" என CABI செயலாளர் ஷைலேந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
எச்சரிக்கை
எதிர்காலப் போட்டிகளைப் புறக்கணிக்க எச்சரிக்கை
கடந்த 2016-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நடப்புத் தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
தற்போது இறுதிப்போட்டியை விளையாடாமலேயே பாகிஸ்தான் தன்னைத் தானே வெற்றியாளராக அறிவித்துக் கொண்டதும், தொடரில் பணியாற்றிய நடுவரே சர்ச்சைக்குரிய சைகைகளுடன் கொண்டாடியதும் இரு நாட்டு கிரிக்கெட் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்காலப் போட்டிகளில் விளையாடுவதைப் புறக்கணிப்போம் என இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.