ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம்
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல மேட்ச்-வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், முழங்கால் பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அவரது பந்துவீச்சு மோசமாகி வந்துள்ளது. இது ஒரு ஆல்ரவுண்டராக அவரது செயல்திறனை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், அவர் தனது கடைசி டெஸ்ட் தொடரான ஆஷஸ் 2023 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் பந்து வீசவில்லை. இந்நிலையில், ஸ்டோக்ஸ் தனது முழங்கால் பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒரு திட்டம் இருப்பதாகவும், அடுத்த சீசனில் உண்மையான ஆல்ரவுண்டராக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.
பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவை சிகிச்சை
இதற்கு முன்னரும் கூட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஸ்டோக்ஸ் முதன்முதலில் மே 2016 இல் இலங்கைக்கு எதிரான சொந்த டெஸ்ட் தொடரின் நடுவில் காயமடைந்து முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தார். பின்னர், 2023 நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அவருக்கு மீண்டும் முழங்காலில் பிரச்சனை ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நிச்சயம் அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார்.